தமிழ்ச் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை ஆரம்பகால வரலாற்று சரித்திரம்
(1919-1955)
1914-ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் தொடங்கிய மகா யுத்தம் லைப்சிக் மிஷன் வட்டத்திலுள்ள சபைகளைத் கஷ்டத்திற்குள்ளாக்கியது. சில மிஷனெரிகள் காவலுக்குள்ளாக்கப்பட்ட போதிலும் பெரும்பாலோர் சில கட்டளைகட்குட்பட்டு ஏறக்குறைய 1915 - ஆம் ஆண்டின் முடிவு வரை தங்கள் தங்கள் இடங்களிலேயே இருப்பதற்குச் அரசால் அனுமதிக்கப்பட்டார்கள். 1915 - ஆம் வருஷம் நவம்பர் மாதத்திலும் 1916 - ஆம் வருஷம் மார்ச்சு மாதத்திலும் இந்த மிஷனெரிகள் தாங்கள் வேலை செய்யும் இடங்களிலிருந்து சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டார்கள். சண்டை முடிந்தவுடனே லைப்சிக் மிஷன் இந்தியாவில் மீண்டும் வேலை செய்ய அனுமதிக்கப்படாதென்பது விரைவில் தெரியவந்தது. லைப்சிக் மிஷனுக்கு உள்ளடங்கி ஒரு தனிப்பட்ட மதஸ்தாபனமாக இருந்ததை விட ஒருபெரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு முழுச் சபையையும் நடத்துவதற்கு ஸ்வீடிஷ் மிஷன் மிகுந்த நம்பிக்கையுடனும், துணிவுடனும் முன் வந்தது. பிரதம அத்தியட்சராகிய நாத்தான் சோடர்ப்ளும் அவர்களின் தலைமையில் ஸ்வீடன் மிஷன் தாய்ச்சங்கம் முன் வந்தது இந்திய சபைகளுக்குக் கடவுளின் ஆசீர்வாதமாக முடிந்தது. மதுரை, இராமநாதபுரம் ஜில்லாவில் இருந்த பழைய ஸ்வீடிஷ் ஸ்தாபனங்களில் தொடர்ந்து வேலை செய்வதில் ஸ்வீடிஷ் மிஷனுக்கு எவ்விதக் கஷ்டமும் நேரிடாதபோதிலும் வடக்கு வட்டத்திலிருந்த சொத்துக்களையும், பள்ளிக்கூடங்களையும் பரிபாலனம் செய்ய ஒப்புக்கொள்வதில் சில கஷ்டங்களிருந்தன. அரசாங்கத்தார் 1916 - ஆம் ஜனுவரியில் லைப்சிக் மிஷனைச் சேர்ந்த எல்லாப் பள்ளிக்கூடங்களின் அங்கிகாரத்தையும் ரத்துச் செய்து விடுவதெனத் தீர்மானித்தனர். இந்தக் கஷ்டமான சந்தர்ப்பத்தில் மிஷனெரி கல்வி சங்கத்தாரும், தென்னிந்தியாவிலிருந்த சில முக்கியமான பிரிட்டிஷ் மிஷனெரிகளும் சேர்ந்து செய்த முயற்சியினால் அரசாங்கத்தார் நம் பள்ளிக்கூடங்களுக்குச் செய்து வந்த பணவுதவியைத் தொடர்ந்து செய்து வந்தனர். இதனால் நம் பள்ளிக்கூடங்ளுக்கும், விசேஷமாகக் கிராமச் சபைகளுக்கும் நேரிடவிருந்த பேராபத்து நீக்கப்பட்டது. இதற்கென உழைத்தவர்களில் சீர்காழி உயர்தரப் பள்ளிக்கூடத் தலைவராயிருந்த மறைத்திரு. G. E. பிலிப்ஸ் அவர்களும், லைப்சிக் மிஷன் பள்ளிக்கூடங்களின் பரிபாலனச் சங்கச் செயலாளராயிருந்த மறைத்திரு. W. H. ஆர் கேன் அவர்களும், மறைத்திரு. J. H. மக்ளீன் அவர்களும் முக்கியமானவர்கள், இவ்விதமிருந்தபோதிலும் ஸ்வீட்டிஷ் சங்கத்தில் உழைத்துவந்த இரு ரஷ்ய தேசத்தினரும், சில காலத்துக்குப் பிறகு ஸ்வீடிஷ் மிஷன் செயலாளராயிருந்த மறைத் திரு . D. பெக்சல் அவர்களும் தொடர்ந்து வேலை செய்யக்கூடாதென்று அரசாங்கத்தாரால் செய்யப்பட்டதனால் வடபகுதியைச் சேர்ந்த வேலைகளைச் செய்வதற்காக மறைத்திரு. E.ஹொய்மன் சாஸ்திரியார் (செயலாளர்) மறைத்திரு. H. பிரிக்கொல்ம், மறைத்திரு. N. சாமுவேல் அவர்கள் இம்மூவரைக்கொண்ட ஒரு ஆலோசனைச்சங்கம் 1916-ஆம் (அக்டோபர் மாதத்தில் ஏற்படுத்தப்பட்டது. நமது மிஷனெரிகளுக்குள்ளும் சபையைச் சேர்ந்த அங்கத்தினர்களுக்கும், நம்முடைய தாங்கம்பாடி மிஷன் வேலை சர்வதேசக் குழப்பங்களால் சிதைவுபடாது நடத்தப்பட வேண்டுமென்ற அபிப்பிராயம் வளர ஆரம்பித்தது. 1917 - ஆம் வருஷத்தில் கூடிய சினாட் இவ்விஷயத்தைப் பற்றிப் பேசிச் சுயேச்சையான ஒரு லுத்தரன் சபைக்குரிய சட்ட திட்டங்களை ஏற்படுத்தும்படி, ஒரு கமிட்டியை நியமித்தது. சபைக்குரிய விஷயங்களில் ஆலோசனைச் சங்கத்திற்கு உதவி செய்த ஒரு தமிழ்ச் சபைக் கமிட்டியை வைப்சிக் மிஷன் சர்ச் கௌன்ஸில் ஏற்படுத்தியது . இது 1914- ஆம் வருஷத்திய சினாட் கூட்டத்திற்கேற்ப அம்மிஷன் செய்த நடவடிக்கைகளில் ஒன்றாகும். இந்தக் கமிட்டி 1917-ஆம் வருஷத்து சினாட் கூட்டத்திலும் ஏற்படுத்தப்பட்டு 1915-ஆம் நாள் முதல் 1920 ஆம் வருஷம் முடிய சபைக்கு ஒரு புதிய அமைப்புச் சட்டம் ஏற்படுத்தும் விஷயமாக ஏற்பட்ட ஆராய்ச்சிகளிலே விசேஷித்த உதவி செய்தது. மறைத்திரு. N. தேவ சகாயம் அவர்கள் தன் வேலையை விட்டு நீங்கும் காலம் வரையும் அந்தக் கமிட்டிக்குத் தலைவராக இருந்தார். அவருக்குப்பின் மறைத் திரு. A.C. செபஸ்தியான் அவர்கள் நியமிக்கப்பட்டார். சபைச் செலவிற்கு வருஷத்திற்குத் தேவையான கடைசி தொகை ரூ . 33,000, இத்தொகையில் சபைச் சேர்ப்பினால் வருமானம் ரூ .12,000 மீதி ரூ . 21,000 மிஷன் சங்கத்தார் சபைக்குக் கொடுக்கும் உதவி. இந்த மிஷன் உதவி நாளடைவில் வருஷத்திற்கு ரூ.500 வீதம் குறைக்கப்பட்டு 42 வருஷ காலவரைக்குள் முழுவதும் சபை' சுயபரிபாலனம் அடையவேண்டும். ஆலோசனைச் சங்கம் 10-10-1916 இல் கூடிய கூட்டத்தில் பேசிய இந்தத் திட்டம் சுயபரிபாலனத்தைப்பற்றி அவர்கள் செய்த முதற் பிரேரேபனையாகும். பின் நடந்த சம்பவங்களிலிருந்து தமிழ்ச்சபை அதிலும் பெருத்த உத்தரவாதத்தை எடுத்துக்கொள்ள அவசியமிருக்கிறதென்று தெரியவந்தது. ஆனால் பாசல் (Basel) மிஷன் வட்டத்தைப் சங்கத்தார் பங்கிட்டுக்கொண்டதுபோல் நம்முடைய தமிழ் நாட்டிலும் எற்பட்டு விடக்கூடாதென்ற உறுதியான எண்ணமிருந்தது. ஆலோசனைச் சங்கத்தாரும், மதுரையில் கூடிய 11-ஆம் சினாட் கூட்டத்தால் நியமிக்கப்பட்ட சுயாதீனத் தமிழ் லுத்தரன் சபை அமைப்புக் கமிட்டியாரும் இவ்விஷயத்தைக் குறித்துப் ஆராய்ச்சிகள் செய்துவந்தார்கள். 11-11-1918 இல் யுத்தம் முடிந்தது. கவலையும் அதிகரித்தது. ஆகவே, புரசவாக்கம் ஆலயத்தில் மேற்சொன்ன இரு கமிட்டிகளும் 16-12-1918 இல் ஒன்றாய்க் கூட்டப்பட்டுச் சுயேச்சையான ஒரு தமிழ் லுத்தரன் சபை நிறுவப்படுவதைப்பற்றி சபை அமைப்புத் திட்டமும் பட்டது. அதைப்பற்றியும் சொத்து விஷயமாயும் அரசாங்கத்தாருக்கு ஒரு அறிக்கை செய்துகொள்ளுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், இது விஷயமாகச் சபைகளின் அங்கீகாரம் பெறுவதற்காக 1919 ஆம் ஜனுவரி மீ 14 ஆம் தேதி தஞ்சாவூரில் ஒரு விசேஷித்த சினாட் கூட்டம் கூட்டுவதென்றும் ஆலோசனைச் சங்கத்தால் தீர்மானிக்கப்பட்டது.

0 Comments