ஊசிக்கோபுர பெயர் வரலாறு

            ஊசிக் கோபுர பாளை மாநகர் சங்கப் புலவர்கள் சங்கமித்திருந்த மங்கலப் பாண்டி வளநாட்டில் சந்தனப் பொதியச் செந்தமிழ்ச் சோலையாம் நெல்லை யம்பதியில் - பாரெலாம் புகழும் பட்டணம் பாளையங்கோட்டை, கிழக்கிந்தியக் கம்பெனியாரின் தலைமைத்தலம். இதன் பழம்பெரும் பெயர் பாளையம், பட்டாளம் அல்லது படை என்று பொருள், கோட்டை கட்டிப்படை வைத்துப் பாதுகாத்த நகர் பாளையங்கோட்டை (கி.பி.1776) இன்றும் இடிந்து பட்ட அதன் பழங்கோட்டைகளைக் காணலாம். தெற்கு பஜாரை கோட்டை கடை பஜார் என்று மக்கள் சொல்வது இப்பொழுதும் வழக்கில் உள்ளது. இ.பி. தாமஸ் என்பவர் மாவட்ட ஆளுநராக இருந்த காலத்தில் (1840) பாளையம்பதியின் கோட்டைச் சுவர் கற்களை பொதுமக்கள் உபயோகித்துக் கொள்ள உத்தரவிட்டார். நெல்லைத் திருமண்டில அச்சுக்கூடத்தில் கூட அக்கற்களை இன்றும் காணலாம். மேலை நாட்டு கத்தோலிக்க குருமாரும் - சீர்திருத்த திருச்சபை அருளாளர்களும் சேர்ந்து இந்நகரைக் கல்விக் களஞ்சியமாக்கினர். சீர்திருத்தத் திருச்சபையினர். 1870 ஆம் ஆண்டிலேயே தூய யோவான் உயர்நிலைப்பள்ளியை உருவாக்கி 1878 ல் அதைக் கல்லூரியாக்கினர். நூறு ஆண்டுகளுக்கு முன்பே கல்லூரி கண்ட நன்ன்நகர் பாளைநகர். அதன் அழகுக்கு மேலும் மேலும் அழகூட்டுவது மேற்கே நிமிர்ந்து நிற்கும் ஊசிக்கோபுரமாகும்.

பாளை - நெல்லை முக்கிய பாதையில் அமைந்த இவ்வழகு ஆலயம் 1826 ஜனவரி மூன்றாம் நாள் கால்கோள் நாட்டப்பட்டது. இவ்வாலயத்தைக் கட்டிய ரேனியஸ் ஜயர் அதற்குப் பெயர் வைக்கவில்லை. 1835 ஆம் ஆண்டில் அவர் விலகிக் கொண்ட போது, சென்னை முதல் பேராயர் காரி என்பார் நெல்லை 1836 ல் முதன் முறையாக நெல்லை வந்தார். அப்பொழுது, தேவசகாயம் ஐயருக்கு முழுப்பட்ட ஆராதனை நடந்து முடிந்தது. குறிப்பு நோட்டில் கையெழுத்திடும் பொழுது ஆலயத்தின் பெயர் என்ன என்று கேட்டார். ரேனியஸ் ஐயருக்குப் பின் பொறுப்பேற்றிருந்த பெற்றிப் ஐயர் ஆலயத்திற்குப் பெயர் இன்றும் இல்லை என்றார். உடனே பேராயர் காரி 'பரிசுத்த திரித்துவ ஆலயம் என்று பேரிட்டார். நூறு ஆண்டுகளுக்குப் பின்பு 1940 ஆம் ஆண்டில் பேராயர் ஸ்தேவான் நீல் என்ற பேரறிஞர் காலத்தில் அத்தியட்சர் ஆலயம்'என்ற பெயர் பெற்றது.

பரி.திரித்துவ அத்தியட்சாலயம் என்று சபை மக்களாலும், ஊசிக்கோபுரம் என்று ஊரிலுள்ள அனைத்து மக்களாலும் இன்றும் அருமையாக அழைக்கப்பட்டு வருகிறது. 1967 ஆம் ஆண்டில் இவ்வழகு ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு மாபெரும் விரிவாக்கம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய ஆலயங்களுள் ஒன்றாக ஜொலிக்கின்றது