ஆபிரகாம் பண்டிதர் என்னும் புகைப்படக் கலைஞர்

    தமிழிசையின் மரபு பற்றி ஆழமாக அறிந்துகொள்ள, நாம் பயில வேண்டிய முதல் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர். அவர் 1917 - இல் எழுதிய, கருணாமிர்தசாகரம் என்னும் இசைத்தமிழ் நூல், இந்திய இசை வரலாற்றில் ஒரு மைல் கல். தமிழிசையின் தொன்மை வரலாறு, சுருதிமுறைகள், நான்கு பெரும் பண்கள் ஆகியவற்றை விரிவாக விளக்கும் 'கருணாமிர்தசாகரம்' நூல் வெளிவந்து நூறு ஆண்டு நிறைவு பெற்று விட்டது.தமிழிசையின் பெருமையையும், தமிழர்களின் தொன்மையையும் உலகமே வியக்கும் வண்ணம், ஏழு இசைமாநாடுகள் நடத்தி, இசைத்தமிழை உயிர்ப்பித்தவர் ஆபிரகாம் பண்டிதர்.
    கர்நாடக இசை என்பதே தமிழிசைதான், ராகங்களின் மூலமே பண் தான், ,ஓர் இயக்கியில் உள்ள ஆதார சுருதிகள் 22 அல்ல 24 தான் ,ச,ரி,க,ம,ப,த,நி என்ற ஏழு சுரப்பெயர்களும் தமிழுக்கேயுரியது, சமஸ்கிருதத்திற்கு அல்ல என்றும் வரலாற்றுத் தரவுகளோடு நிறுவியவர் ஆபிரகாம் பண்டிதர்.
    ஆபிரகாம் பண்டிதர் ஓர் ஆசிரியராக, சித்த மருத்துவராக, பரிசோதனை விவசாயியாக, சோதிடக்கலைஞராக, பதிப்பாளராக, அச்சகக் கலையின் முன்னோடியாக, பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவராக. தமிழிசை மாநாடுகளை ஒருங்கிணைத்தவராக நாம் அறிவோம். ஆனால் இந்தியப் புகைப்படக்கலையின் முன்னோடியாகவும் அவர் இருந்துள்ளார் என்பது பெரும்பாலோனோர் அறியாதது.
    ஆபிரகாம் பண்டிதர் 1859ல் தாமிரபணி நாகரிகத்தின் விழுதாக திருநெல்வேலி சாம்பவர் வடகரையில் பிறந்தார். பங்களா சுரண்டையில் பள்ளிப்படிப்பை முடித்து 1874ல் திண்டுக்கல் நார்மல் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார்.ஆபிரகாமின் அறிவாற்றலைக் கண்ட அப்பள்ளியின் தலைவர் அருட்திரு யார்க் அடிகளார் அவரை தமது மாதிரிப்பள்ளியில் ஆசிரியராக நியமித்தார். மாணவர்கள் அவரை “கதை உபாத்தியாயர்” என்று மாணவர்கள் அன்போடு அழைத்தனர்.
    அருட்திரு யார்க் அடிகளார் அடிப்படையில் ஒரு புகைப்படக்கலைஞர், தினசரி புகைப்படங்கள் எடுத்து வந்தார். கலைகளிலும், இசையிலும், ஓவியத்திலும் அதீத ஆர்வம் கொண்டிருந்த ஆபிரகாம் பண்டிதர் புகைப்படக் கலையாலும் ஈர்க்கப்பட்டார். எந்தத் தயக்கமுமின்றி யார்க் அடிகளார் ஆபிரகாம் பண்டிதருக்கு புகைப்படக் கலையை கற்றுக் கொடுத்தார். நாளடைவில் ஆபிரகாம் பண்டிதர் புகைப்படக் கலையின் நுட்பங்களை அறிந்து அக்கலையில் விறபன்னர் ஆனார்.
    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே புகைப்பட ஸ்டுடியோவும், தொழிற்கலைப் பள்ளியும் முதலில் சென்னையில் தான் தொடங்கப்பட்டது. அதாவது இப்போதைய கவின் கலைக் கல்லூரியில். மதராஸ் ராஜதானியின் தலைநகராக இருந்த சென்னையில் மே மாதம் 1850ல் தொழிற்கலைப் பள்ளி அலெக்ஸாண்டர் ஹண்டர் என்னும் ஆங்கிலேயரால் தொடங்கப்பட்டது. அப்போது புகைப்படக்கலை முக்கியப் பாடமாகவும் இருந்தது. ஹண்டர் மற்றும் எலியட் ஆகியோரால் மாணவர்களுடன் சென்று தமிழகத்தின் முக்கிய ஊர்கள் அனைத்து புகைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. ‘‘மெட்ராஸ் புகைப்படச் சங்கம் (PSM, Photographic Society of Madras)”1857ல் முனைவர் அலெக்ஸாண்டர் ஹண்டரால் தொடங்கப்பட்டது. (முதல் பெயர் மெட்ராஸ் அமெச்சூர்போட்டோகிராபர்கள் சொசைட்டி MAPS என்று அழைக்கப்பட்டது). வால்டர் எலியட் இதன் முதன் தலைவராக இருந்து சென்னையில் புகைப்படச் சங்கத்தை வளர்த்தெடுத்தார். இது உலகின் மிகப் பழமையான புகைப்படச் சங்கமாகும்.  
    பின்பு ஆபிரகாம் பண்டிதர் தஞ்சாவூருக்கு வந்து 1902ல் ஆபிரகாம் பண்டிதர் விலை உயர்ந்த 15 x 12 டல்மெயெர் லென்சுடன் ஒரு புகைப்படக் கருவியை வாங்கி தொடர்ச்சியாகப் புகைப்படங்களை எடுக்கலானார். பல வேதிப்பொருட்களைக் கொண்டு அவரே நெகட்டிவ்களை கழுவி அவரே ப்ரிண்ட் செய்தார். பல புதிய கண்டுபிடிப்புகளையும் கழுவும் முறையில் செய்தார்.இந்தியாவின் சிறந்த அமெச்சூர் புகைப்படக்கலைஞராகவும் அவர் பிரபலமானார்.அதன் நீட்சியாக 1909ல் லண்டனிலுள்ள ராயல் கலைச் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஷுல்ஸ், வேட்ஜ்வுட், நீப்ஸ், மற்றும் டாகெரே போன்ற புகைப்படக் கலைஞர்கள் செல்வாக்கு பெற்றிருந்த காலம் அது.அக்காலத்தில் புகைப்படக்கலை தனிமனிதச் செயல்பாடாக இருந்தது. படம் எடுப்பது, நெகட்டிவைக் கழுவது,பின்பு பிரிண்ட் செய்வது, இறுதியாக அதனை மவுண்ட் செய்து பிரேம் செய்வது என எல்லாவற்றையும் புகைப்படக் கலைஞரே செய்ய வேண்டும்,அது ஒரு பொற்காலம்.
    புகைப்படக் கலையின் தொழில்நுட்ப அடிப்படையே பின்னாளில் 1912ல் தஞ்சையில் மின் விசையில் இயங்கும் முதல் அச்சகமாக லாலி அச்சகத்தை உருவாக்கினார் , அவ்வச்சகத்திலேதான் அவரே வடிவமைத்து , அச்சுக் கோர்த்து கருணாமிர்தசாகரம் என்னும் அழியாப் புகழ் பெற்ற இசை நூலை மிகுந்த அழகியலுடன் உருவாக்கினார்.
    அவருடைய நான்கு மகன்களும் புகைப்படக் கலையில் நிபுணத்துவம் பெற்றனர். சுந்தரபாண்டியன் ஓவியத்திலும் , புகைப்படக்கலையிலும் சிறந்து விளங்கினார். அதற்கு ஒரு படி மேலாக ஜோதிப் பாண்டியன் புகைப்படக் கலையில் மிக உயர்ந்த இடத்திற்குச் சென்றார். லண்டன் ராயல் புகைப்படக் கலைச் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.உலகம் முழுதும் பயணித்து தன்னுடைய புரோமைட் ப்ரிண்டுகளை காட்சிப் படுத்தினார் (இந்த ஜோதிப்பாண்டியனின் இசைச் சீடர்தான் தஞ்சை தன்ராஜ் மாஸ்டர், தன்ராஜ் மாஸ்டரின் சீடர்கள்தான் இளையராஜாவும், ஏ,ஆர். ரகுமானும்). வரகுணப் பாண்டியன் இந்தியப் புகைப்படக்கலையின் பெடரேசன் நடத்திய பல புகைப்படக் காட்சிகளுக்கு நடுவராக இருந்தார். அவருடைய கடைசி மகன் சௌந்தர பாண்டியன் தென்னிந்திய ரயில்வேயின் அதிகாரப் பூர்வமான புகைப்படக் கலைஞராக இருந்தார். தொடர்ச்சியாக அவரது குடும்பத்திலிருந்தவர்கள், புகைப்படத் துறையிலும், திரைப்பட ஒளிப்பதிவுத்துரையிலும் பிரகாசித்தனர். பின்பு ஆபிரகாம் பண்டிதரின் பேரன் தவப்பாண்டியன் தஞ்சாவூர் அமெச்சூர் புகைப்படக் கழகத்தைத் தொடங்கி நீண்ட காலம் நடத்தி வந்தார். எல்லாப் பேரன்களுமே இக்கழகத்தின் வளர்ச்சியில் பங்கு பெற்றனர்.
    இசை, நடனம் மட்டுமன்றி புகைப்படக் கலையிலும் தஞ்சாவூர் சிறப்பாக விளங்கியதற்கு ஆபிரகாம் பண்டிதரின் குடும்பமே காரணம்.
புகைப்படம்..
1911ல் ஆபிரகாம் பண்டிதர் தன்னுடைய கருணானந்தர் விவசாயப் பண்ணை திறப்பு விழாவை எடுத்தது, படத்திலிருக்கும் தண்ணீர் எடுக்கும் காற்றாலை அவரே உருவாக்கியது.