ஆலங்குளம் சபை வரலாறு
திருநெல்வேலிக்கு
மேற்குப் பகுதியில் திருநெல்வேலி–தென்காசிப் பெரும்பாதையில் இருக்கும் ஆலங்குளம் 1823லேயே பெரிய ஊர். ரேனியஸ் ஐயர்,
தாவீது உபதேசியார் மற்றும் சாத்தப்பன், ராயப்பன் என்ற இரண்டு செமினரி மாணவர்களுடன்
16.01.1823ல் பாளையங்கோட்டையிலிருந்து நற்செய்தி
பயணமாக புறப்பட்டு சேரன்மகாதேவி, வீரவநல்லூர், ஆதிச்சநல்லூர் ஊர்களில் நற்செய்தி
அறிவித்து, புதுப்பட்டி வழியாக 18.01.1823ல் ஆலங்குளம் வந்தடைந்தார்கள்.
ஆலங்குளம் ஊரார்
துவக்கத்தில் நற்செய்தியைக் கேட்க விரும்பவில்லை. பின் சுவிசேஷ சத்தியங்களைக்
கேட்டு விசுவாசித்தனர். சிலைகளை வணங்குவதை தவிர்த்து கிறிஸ்து மார்க்கத்தை ஏற்கச்
சித்தம் கொண்டனர் என்று ரேனியஸ் ஐயர் எழுதுகிறார்.
13.06.1829 ஆம் ஆண்டு ரேனியசும், கூம்ஸும் ஆலங்குளத்தில் நற்செய்தி அறிவித்து,
நற்செய்தி பிரதிகளை கொடுத்தப்போது ஒரே ஒரு மனிதனை தவிர, அவற்றை வாங்கிக்
கொள்ளக்கூட ஒருவரும் விரும்பவில்லை என்று ரேனியஸ் ஐயர் தனது நாள்குறிப்பேட்டில்
எழுதுகிறார்.
1830 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தலைவன்கோட்டை ஜாமீனில் கிறிஸ்தவர்களுக்கு பெரிய
துன்பம் ஏற்பட்டது. ஆனாலும் ஆலங்குளம், காசியாபுரம் முதலிய இடங்களில் மக்கள்
கிறிஸ்தவ நற்செய்தியை ஆவலோடு கேட்டுச் சிந்திக்கத் தொடங்கினர். 1830 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆலங்குளத்தில் சபை ஆரம்பிக்கப்பட்டது. செமினரி,
பிரிப்பராண்டி மாணவரும், பிரசங்கிமாரும், உபதேசிமாரும் ஆலங்குளத்தில் செய்த தீவிர
சுவிசேஷ பணியின் பலனால் பல குடும்பங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். கூடவே பல கொடிய
துன்பங்களும் அவர்களுக்கு ஏற்பட்டன.

0 Comments