அதிமங்கல காரணனே துதி தங்கிய பூரணனே பாடல் பிறந்த வரலாறு

தேவவரம் முன்ஷியார் (1802-1874) இவர் குமரி மாவட்டத்திலுள்ள மயிலாடியில் பிறந்தவர். ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருத மொழிகளில் புலமை பெற்றவர். வானியல், இசை ஆகியவற்றிலும் இவருக்குத் தேர்ச்சி உண்டு. மீட் ஐயரோடு இணைந்து நாகர்கோவிலில் நற்செய்திப் பணி ஆற்றினார். சிறந்த ஜெப வீரர். தேவவரம் முன்ஷியார் பல்வகைப் படைப்புகளைப் படைத்துள்ளார்.

இவரது 'வேத விதிக்குறள்' எனும் நூல் விவிலியச் செய்திகளைக் குறள் வடிவில் தருகிறது. இவரது 'திருட்டாந்த மாலை' எனும் நூல் அவ்வையாரின் 'மூதுரை' எனும் நூலைப் பின்பற்றி, கிறித்தவ வாழ்வியல் நெறிகளை உணர்த்துகிறது. இவரது ' செம்மொழி மாலிகை ' எனும் நூல் அவ்வையாரின் ஆத்திச் சூடி' போன்றதாகும். 'சங்கீத வாரணம்', நல்லறிவின் சாரம் முதலிய நூல்களையும் முன்ஷியார் படைத்துள்ளார்.

அகராதிப் பணிகள் சிலவற்றையும் முன்ஷியார் செய்துள்ளார். தேவவரம் முன்ஷியார் 'சிந்து கவி மாலை' எனும் கீர்த்தனைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். கிறித்தவக் கீர்த்தனைத் தொகுப்பில் இவருடைய ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

அவற்றுள் சில:

'அடியேன் மனது வாக்கும் கொடிய நடத்தையுமே…..'

'அதிமங்கல காரணனே துதி தங்கிய பூரணனே…..'

'ஏசு நாயகனைத் துதி செய், செய்…..'

 

கிறிஸ்மஸ் காலத்துக்குரிய இவர் பாடலின் ஒரு சரணம் பின்வருமாறு:

முடி - மன்னர்கள் மேடையையும் மிகு உன்னத வீடதையும் நீங்கி மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழு, வந்தனையோ தரையில்?